வீடு எப்போதும் மங்களகரமாக, செல்வ செழிப்புடன் இருக்க கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை
ஒரு இல்லறம் இனிதாக சிறந்து விளங்க பெண்மணியின் பங்கு தான் அதிகம். குழந்தை வளர்ப்பு, சமையல், உடை, செலவு, சிக்கனம், சேமிப்பு, நாகரிகம் எல்லாமே பெண்களின் தலையீடு இல்லாமல் சரியாக அமையாது. ஆக, இது மாதிரி விஷயங்களில் திறமையான பெண்களின் இல்லறம் நிச்சயம் நன்றாகத் தான் இருக்கும். சிறு சிறு விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் இல்லறம் மகிழ்ச்சியாக, செல்வ செழிப்புடன் காணப்படும்.
பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் பற்றிய பதிவு தான் இது. ஆயிரம் அலங்கார விளக்குகள் இருந்தாலும் எண்ணெய் ஊற்றி எரியக்கூடிய ஓர் எளிய விளக்கின் வெளிச்சமே மங்கல சூழ்நிலையைத் தரும். குத்துவிளக்கு ஏற்றும்போது அதன் திரி கிழக்கு முகமாக எரிவது சிறப்பு. இதனால் வாழ்வில் துன்பம் அகன்று, சுபிட்சம் வரும் என்று சொல்லப்படுகிறது. குத்துவிளக்கின் தீபம் வடக்கு முகமாக எரிந்தால் செல்வம் சேரும். பங்காளிப் பகை உள்ளவர்கள் குத்துவிளக்கின் திரியை மேற்கு முகமாக எரியவிட்டால் பகை நீங்கும்.
ஆனால், குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக எரிய கூடாது அது பீடை. தீபத்திற்கு நெய்விட்டு ஏற்றுவது சிறப்பைத் தரும். செல்வமும் நன்மையும் சேரும். அகல் போன்று ஒரு முக விளக்கு ஏற்றி வழிபடுவதற்குச் சுமாரான பலன் தான். மூன்று முக விளக்கு ஏற்றுவதால் புத்திர சுகம் கிட்டும். நான்கு முக விளக்கு ஏற்றுவதால் பசு, பூமி இவற்றை அடையலாம். ஐந்து முக விளக்கு ஏற்றும் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நிகழ்வுறும். மங்கல நிகழ்ச்சிகளின் போது ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றுவதே சிறப்பு. காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபமேற்றுவது நல்லது.
வெள்ளிக்கிழமை தேவியின் தினம், அன்று சுக்ரனுக்கு உகந்த நாள். அவர் மணமானவர்களை ஆசீர்வதிக்கும், காக்கும் கிரகம். பெண்கள் மங்கல ஸ்நானம் செய்து, கவலையை மறந்து புன்னகையுடன் பூவும் பொட்டும் அணிந்து ஆனந்தமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை செய்ய வேண்டிய இடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழை இலையை வைத்து, அதன் மேல் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை வைத்து, அதன் முகங்களுக்கு பொட்டிட்டு, பூ சுற்றி, விளக்கேற்றி ஆவாகனம் செய்து, ‘லக்ஷ்மி அஷ்டோத்திரம்’, அல்லது ‘லலிதா சகஸ்ரநாமம்’ சொல்லி பாயாசம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். எந்த திசையில் இருந்து நதி ஓடி வருகிறதோ அந்த திசையை நோக்கி நீராட வேண்டும்.
மற்ற நீர்நிலைகளில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நீராட வேண்டும். கோயில் குளங்களில் ஆலயத்தை நோக்கி நீராட வேண்டும். நள்ளிரவில் நீராடக் கூடாது. சிவராத்திரி, மாதப்பிறப்பு, பிறப்பு-இறப்பு, கிரகணம் இந்த மாதிரியான சமயங்களில் நள்ளிரவில் நீராடுவது தோஷமில்லை. வீட்டில் சுவாமி படங்களை பொதுவாக கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி வைப்பது நன்மை தரும். வீட்டு விலக்காகி, ஸ்நானம் செய்த அன்று கோயிலுக்கு போவது நல்லதல்ல. அன்று விரதம் இருப்பதும் வேண்டாம்.
விலக்காகி ஐந்தாம் நாள் கோவிலுக்கு போவது உசிதமானது. ராகு காலத்தில் விளக்கேற்றி அன்னை சண்டிகையை துதித்தால் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். எலுமிச்சை பழத்தை துர்க்கை சன்னதியில் பிழிந்துவிட்டு அதன் மூடிகளை கிண்ணம்போல் ஆக்கி துர்க்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய், ராகு காலங்களில் விளக்கேற்றுவது வழக்கத்தில் உள்ளது. இது துர்கா தேவியை சாந்தபடுத்துவதாக ஐதீகம். அம்பாளுக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்துவதற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது.
பௌர்ணமி தினமும் ஏற்றது. பொதுவாக தெய்வங்களுக்கு எலுமிச்சைபழம் சாத்தி அர்ச்சனை செய்பவர்கள், நிவேதனமாக தயிர் சாதத்தை படைக்க வேண்டியது அவசியம். எழுமிச்சம் பழ சாதத்தையும் நிவேதனம் செய்யலாம். தீர்க்க சுமங்கலியாக வாழவும், செல்வச் செழிப்பு, புத்திரபாக்கியம் கிடைக்கவும் தினசரி துளசி பூஜை செய்ய வேண்டும். துவாதசி அன்று துளசியை தொட்டு பூஜிக்கக் கூடாது. சுமங்கலிகள் தினமும் தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
சாதாரணமாக குளித்துவிட்டு நீரை தலையில் தெளித்துக் கொண்டால் போதும். ஆனால், இரவு தாம்பத்திய உறவு கொண்டால் அன்று காலை அவசியம் தலை முழுகிய பிறகே துளசி பூஜை செய்ய வேண்டும். திருமணம் தடங்ககல்பட்டுக் கொண்டே இருக்கிற பெண்கள் தினமும் வீட்டில் பவானி [பார்வதி] படத்தை வைத்து, குறித்த நேரத்தில் பக்தியுடன் வழிபட்டு வந்தால் நிச்சயம் நடக்கும். தெய்வ படங்களுக்கு நமஸ்கரிப்பது தெற்கு திசையில் மட்டும் கூடாது. குடும்பத்தில் சாந்தி நிலவ ஸ்ரீ விநாயகரை வழிபட வேண்டும்.
இதனால் எல்லாத் தீமைகளும் அகன்று சாந்தியும், சமாதானமும், நன்மையும் கிடைக்கும். குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் ஒரு பெண்ணின் கணவன் எந்த அத்துமீறல்களையும் செய்யமாட்டான். அவளது நடவடிக்கைகளால் ஏற்படும் நம்பிக்கையும் அதன் காரணமாக வரும் நன்மதிப்பும் அவனை நிச்சயம் தடுமாற செய்யாது. மாறாக தூக்கி நிறுத்தும். ஏனென்றால் இப்படிப்பட்ட பெண்ணே அவனது பலம், பாதுகாப்பு எல்லாம். திறமையுள்ள மனைவியை கிடைப்பது ஒருவனுக்கு அதிர்ஷ்டம் தான்.
ஒரு பெண்ணுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படுவது அவளுக்கு புற அழகால் என்பது சரியல்ல. அவள் தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை வாழ்க்கையில் எப்படி கடைபிடிக்கிறாள் என்பதைப் பொறுத்துதான். அவளைப் பற்றிய மதிப்பு அமையும்.
