இரவில் படுத்தவுடன் தூக்கம் வரவில்லையா? தீர்வு இதைசெய்தால் மட்டும் போதும் .
நிம்மதியான உறக்கம் என்பது நமக்கும் குழந்தைப்பருவத்தில் இருந்து இருக்கும். ஆனால் தற்சமயம் எல்லோராலும் படுத்தவுடன் உறங்கி விட முடிவதில்லை. அப்படி படுத்தவுடன் தூங்குபவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான். இப்படி படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வு தான் இந்த பதிவு.
முதலில் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தூங்கி எழுந்து, விடிந்தவுடன் சரியாகிவிடும் என்ற எண்ணத்தை முதலில் நம் மனதிற்குள் கொண்டுவர வேண்டும். இந்த ஒரு நேர்மறை எண்ணமே நம்மை தூக்கத்திற்கு கொண்டு சென்றுவிடும். அடுத்ததாக நீங்கள் உறங்கும் இடமானது அதிக வெப்பமாக இல்லாமல் சற்று குளிர்ச்சியாக இருந்தால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும். அதற்காகத்தான் இப்போது குளிர்சாதனப் பெட்டி வசதிகள் வந்துவிட்டது.
எல்லோராலும் இந்த வசதியை அனுபவிக்க முடியாது தான். முடிந்தவரை உங்கள் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து தூங்குவது நல்லது. அல்லது ஒரு பெரிய போர்வையை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து நீங்கள் படுக்கும் அறையில் ஆணியிலோ, கொடியிலோ மாட்டி வைத்து விடுங்கள். அந்த ஈரத்துணியில் இருக்கும் குளிர்ச்சித்தன்மையானது நீங்கள் படுக்கும் இடத்தில் இருக்கும்.
தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக குளிர்ந்த நீரில் குளித்து விட்டு தூங்கச் சென்றால் நல்ல தூக்கத்தை பெற முடியும். அப்படியும் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? அடுத்ததாக ஒரு சிறிய யோகாவை முயற்சி செய்யலாம். கண்களை மூடி அமர்ந்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்வாங்கி இழுத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நிமிடங்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் செய்துவரும் பட்சத்தில் உங்கள் மனமானது ஒரு அமைதி நிலையை அடையும்.
அதன்பின்பு நல்ல தூக்கம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. என்ன செய்தாலும் பயன் இல்லை. எனக்கு தூக்கம் என்பது இரவில் வரவே வராது என்று சொல்பவர்களாக இருந்தால் உங்களுக்கு தீராத கஷ்டம் ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம். முடிந்தவரை அந்த கஷ்டத்தை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிரும் போது உங்களின் மன பாரமானது நிச்சயம் குறையும். கஷ்டம் தீராமல் இருந்தாலும்கூட, அதை யாரிடமும் கூறாமல் இருப்பது இன்னும் கொடுமையானது.
உங்களால் முடிந்தவரை உங்களின் கஷ்டத்தை உங்களின் நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து விடுங்கள். பாரம் குறையும். அதன் பின்பு நிச்சயம் தூக்கம் உங்களது கண்களை தழுவும். சிலருக்கு ஆன்மீகத்தில் நல்ல நம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தூங்கும் சமயத்தில் அனுமனை நினைத்துக் கொள்ளலாம். ‘ஓம் ஆஞ்சநேயாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளலாம் என்ற மன தைரியமானது நமக்குள் வந்துவிடும்.
அந்த மன தைரியம் நமக்கு தூக்கத்தை தரும். இதையும் தாண்டி உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? ‘எனக்கு தூக்கம் வராது இரவில் எனக்கு தூக்கம் வராது’ என்ற எண்ணத்தை அடியோடு மறந்து, நன்றாக தூங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு படுப்பவர்களுக்கு நிச்சயம் தூக்கம் வரும். இரவு தூக்கம் சரியாக இல்லை என்றால் நம் ஆரோக்கியமும் கெட்டு விடும். அடுத்த நாள் நாம் பார்க்கும் வேலையும் கெட்டுவிடும், என்பதை மனதில் கொண்டுவவர்களுக்கு நிச்சயம் தூக்கம் வரும்.
இதையெல்லாம் தாண்டி சிலர் இருக்கிறார்கள். தூங்கும்போது தொலைபேசி பார்ப்பவர்கள், டிவி பார்ப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் நிச்சயம் இரவு தூக்கம் கெட்டு தான் போகும். இவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது. அவர்களாகவே தங்களது பழக்கத்தை திருத்திக் கொண்டால் தான் உண்டு.
