சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்

Admin

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்



வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் முதல் கடகம் வரை நான்கு ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு கிடைக்கும் என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.

சனிபகவான் நீதிமான். சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று பலரும் பயப்படுவார்கள். சனிபகவான் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார். தவறு செய்பவர்களை மட்டுமே தண்டனை கொடுப்பார். பலருக்கும் படிப்பினைகளை கொடுப்பார் சனிபகவான். சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பலன்களைப் பார்த்து பயப்பட தேவையில்லை.

மேஷம் 

தொழில் சனி 

மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் அதிபதி பத்தில் அமர்வது பாதகமில்லை. சசமகா யோகம் கிடைக்கிறது. தொழில் ஸ்தான அதிபதி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு பாதகமில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது.

 கணபதியை வணங்க, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். 

மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும். பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்

ரிஷபம் 

நல்ல காலம் பிறந்தாச்சு 

ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாராளமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். 

எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். பெண்களுக்கு இதுநாள் வரை இருந்த உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். 

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்துடன் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலமே.

மிதுனம்

அஷ்டமத்து சனியால் அச்சம் வேண்டாம் 

மிதுனம் ராசிக்காரர்களே சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் என்று கவலைப்பட வேண்டாம். பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உங்களது ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். 

பங்கு சந்தை முதலீடுகளில் அதிக கவனம் தேவை. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். 

வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது.

 பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக செல்வது நல்லது. 

பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்

கண்டச்சனி கவலை வேண்டாம் 

சனிபகவான் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. சனி பகவான் ஆறாம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது. இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ஆம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும்.

 புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். 

உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம். கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூரில் உள்ள நாச்சியார் கோயிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.


Demos Buy Now