பெண்களின் மார்பகம் பற்றி தேரையர் சித்தர் கூறியது
பெண்களின் மார்பகம் என்பது பாலூட்டும் ஒரு உறுப்பு. தாய்மையின் அம்சம். பரம்பரை உடல் வாகு மற்றும் உண்ணும் உணவினைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மார்பகங்களின் அளவுகள் வேறுபடுகிறது. எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இந்த நிஜங்களைத் தாண்டி வாழ்வியல் சூழலில் தாய்மையின் அம்சமான மார்பகங்கள் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகப் படுகிறது.
பெண்களின் மார்பகங்களை பெரிதாக்குகிறோம், சிறியதாக்குகிறோம், ஆழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில் நவீன மருத்துவம் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும், வைத்திய முறைகளையும் முன் வைக்கின்றன. எனினும் இத்தகைய சிகிச்சைகள் பெண்களின் உடல் நலத்துக்கு எதிரானது, காலப் போக்கில் பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனை பெண்கள் உணர்ந்திட வேண்டியது அவசியம்.
எல்லாம் சரிதான், மேலே சொன்ன விவரங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.
தேரையரும் கூட பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் ஒரு வைத்திய முறையினை கூறியிருக்கிறார்.
தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு.....
கொள்ளப்பா மூஞ்சூரை நீரதிலே விட்டு
குதித்தாவி நீந்திடும்போ திருதுண்டாக
மெள்ளப்பா கத்தியினால் வீசிப்போடு
மிதந்ததுவும் முழுகினதும் வெவேறே கண்டு
தள்ளப்பா பசுஞ்சாணம் கவசம் செய்து
தவறாமல் புடமிடவே நீறிப் போகும்
விள்ளப்பா ப்றணியில் புரிவாய் செய்துவைத்து
மெல்லியர்கள் கொங்கையிலே தடவிப்பாரே.
பாரடா அழுத்திய துண்டத்தின் பற்பம்
பாங்காகப் பூசிடவே சுருங்கிப் போகும்
வேரடா மிதந்த துண்டு பறபந்தன்னை
மேலிட்டுப் பூசிடவே பெருத்துக் காணும்
மாரடா இப்படித்தான் செய்து பாரு
மகத்தான என்குருவின் முறை பொய்யாகாது
சாரடா சிவசக்தி பூசை தன்னை
தவறாது செய்திட்டால் சாதிப்பாயே.
மூஞ்சுறு என்னும் எலியைப் பிடித்து தண்ணீரில் போட்டால் அது குதித்துத் தாவி நீந்துமாம். அப்போது அதனை கத்தியினால் இருதுண்டாக வெட்டிட வேண்டுமாம். அப்ப்டி வெட்டிய உடன் ஒரு துண்டானது நீர்ல் மிதக்குமாம். மற்றது மூழ்கி விடுமாம். இப்போது இந்த இரு துண்டுகளையும் தனித் தனியே பசுஞ் சாணத்தினால் கவசம் செய்து புடமிட வேண்டும் என்கிறார் தேரையர். இப்படி புடமிட்டால் அது எரிந்து நீறாகி விடுமாம்.இவற்றை தனித் தனியே சேகரம் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது நீரில் மூழ்கிய பாகத்தினை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூசினால் அந்த மார்பகம் சுருங்கி விடுமாம். அதே போல நீரில் மிதந்த மூஞ்சூறின் உடல் பாகத்தை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூச அந்த மார்பகம் பெருத்து விடுமாம். இந்த வைத்திய முறையைச் செய்யும் போது தவறாமல் சிவசக்தியை வணங்கி செய்திட வேண்டும் என்கிறார்.
பல லட்சம் ரூபாய் செலவும், சிகிச்சைக்குப் பின்னர் பக்க விளைவுகளையும் கொண்டு தரும் நவீன வைத்திய முறைக்கு சவால் விடும் ஒரு வைத்திய முறையினை நமது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அருளியிருக்கின்றனர். இந்த முறையின் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கும், மேம்படுத்துதலுக்கும் உட்பட்டவை என்றாலும் கூட நமது முன்னோரின் அறிவின் திறம் எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதற்கு இம் மாதிரியான பாடல்கள் உதாரணமாய் இருக்கிறது.
