சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - வரலாறு
சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார்.
நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.
இதையடுத்து சந்தியா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து வந்தார். சூரியதேவர் மூலம் சாயாவிற்கு சனி என்ற மகன் பிறந்தார். நிழலின் மகனாகப் பிறந்ததால் சனி கருமை நிறத்தில் இருந்தார். அதைக் கண்ட சூரியதேவர் தன் புதல்வனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அதனால் சாயா கண்ணீர் விட்டதைக் கண்டு சூரிய தேவர் மீது கோபமடைந்த சனி தன் வக்கிர பார்வையை அவர் மீது செலுத்தினார். இதனால் சூரிய கிரகணம் ஏற்பட்டது. சனியின் சக்தியைக் கண்டு வியந்த சூரிய தேவர் சிவபெருமானிடம் சனியைப் பற்றி கேட்டார். அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ற கர்மபலன்களை வழங்கவே தான் சனி பிறந்துள்ளதாகக் கூறினார்.
இதனால் மகிழ்ந்த சூரிய தேவன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். சசனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார். அவர் பிறப்பால் ஒரு தேவனாக இருந்தாலும் அசுரர்களுக்கும் பல தருணங்களில் நீதி கிடைக்க துணையாக நின்றார். இதனால் அசுர குரு சுக்ராச்சாரியார் சனியுடன் நட்பு கொண்டார்.
ஆனால் சூரிய தேவரோ சனியை வெறுக்கத் தொடங்கினார், பிறகு சனி சூரியலோகத்தை விட்டுச் சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். இவரது வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.
வெள்ளிக் காப்பில் சனீசுவர பகவான் சனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும்.
இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர்.
இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி. உலோகப் பொருள்களில் - இரும்பு இவருடையது. கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
